Sunday, 5 May 2019

நாயகர்கள்?

மாற்றம் காண எண்ணி
மலையேறி
தலையில் சுமையேந்தி
பலநாள் பசித்திருந்து
பள்ளிக்கு அனுப்பியவள்,
துள்ளி வரும் பிள்ளை பாதம்
முள்ளில் பட்டு நோகுமென
காதில் கிடந்த
தோடு விற்று
பாதணி வாங்கித் தந்தவள்,
விளையாட்டு போட்டிக்கும்
கலைவிழா நிகழ்ச்சிக்கும்
சில்லறை செலவுக்கான
சிறு சேமிப்பையும்
சிரித்த முகத்தோடு
மகனுக்கு கொடுத்தவள்
மலையகத் தாய்

துடிப்பான பிள்ளையிவன்
படிப்பதாக கூறி
படிப்பறிவில்லாத
பெற்றோரை ஏமாற்றி
அறியா பருவத்தில்
மாயை காண்பிப்போர்
பின்னே சென்று
மன்னவர் அவர்தான் என்றெண்ணி
மனமதை அலையவிட்டு
சாதரண தரம் வரை
நிதானமாக இருப்பதே பெறும் பாடு
பெறுபேறு குறைந்த பின்னே
பெற்றோரை குறைகூறி விட்டு
பையெடுத்து பயணிப்பர் தலைநகரம்
பலி ஆடுகளை போல்
கூலி வேலை பல செய்து
புறக்கோட்டயைில் புத்தாடை
விலைக் கழிவில் வாங்கி
தலையில் வண்ணச் சாயம் பூசி
கழுத்தில் மாலையும்
கையில் வளையமும் அணிந்து
பகட்டாய்
தொடுதிரை தொலைபேசி கொண்டு
வலை வீசிடுவர்
தடுமாறும் இளையோரை
தம்மைப் போல் மாற்ற

சிந்திய வியர்வைக்கெல்லாம்
எந்த பயனுமில்லை என
நொந்து மனம் வாடும் பெற்றோரின்
சிதைந்த கரங்களிலே
சேமலாப நிதி கிடைத்தவுடன்
புதுக் கதைகள் பலக் கூறி
அதையும் கைப்பற்றி
முச்சக்கர வண்டி வாங்கி
மிச்ச பணத்தில்
நண்பர்களுடன் கொண்டாடி
ஊரை வலம் வருபவர்கள்
நாளைய தறைமுறையை
வழி நடத்துகின்ற
------------நாயகர்கள்------------

No comments:

Post a Comment