Sunday, 5 May 2019

மு(மூ)டிச்சாத்திய மன்னர்கள்

திருட்டு கூட்டங்களை
பெத்ததெடுத்த தாயழுது
கண்ணீர் நிரம்பியதில்
நான்கு புறம் கடலாச்சி

பேணும் வகையறியா
ஈன்ற பிள்ளைதனை
தாய் தத்துக் கொடுத்த கதை
ஏராளம் உலகிலுண்டு

புத்திரர்கள் கூட்டு சேர்ந்து
தாயை தத்து கொடுத்த கதை
வேறெங்கும் நிகழவில்லை
இங்கே நிகழுதுங்க

வேற்று தேசத்தவர்
போற்றி வளர்த்த நாட்டை
போராட்டம் பல நிகழ்த்தி
பெற்ற பின்னே மாற்றமென்ன?

அபிவிருத்தி செய்தோரை
அந்நியரென விரட்டிவிட்டு
கூவி விற்போர் கூடியிங்கு
தவிக்க செய்தார் தாய்நாட்டை

வளர்ச்சி என்று ஒன்றைக் காண
இன்று வரை முடியவில்லை
கிளர்ச்சி மட்டும் தொன்று தொட்டு
தொடருதிங்கே முடிவேயில்லை

பாடுபட்டோர் பசித்திருக்க
கூறு போட்டு ருசிப்பவர்கள்
தேரிலேறி போவதற்கும்
வரி செலுத்தி வழி சமைப்போம்

நரிகள் போல தந்திரமாய்
காரியத்தை நிகழ்த்த வேண்டி
ஆரியக் கூத்தாடியிங்கே
கூறியதை மாற்றிச் சொல்வர்
---மு(மூ)டிச்சாத்திய மன்னர்கள்---

No comments:

Post a Comment